Monday, November 2, 2020

திருக்குறள் கதைகள் - குறள் 15

திருக்குறள் கதைகள்

இயல்: பாயிரவியல்

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: 2 [வான் சிறப்பு]


குறள் 15:

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை.


பொருள்:

பெய்யாமல் உலக மக்களின் வாழ்க்கையைக் கெடுப்பதும் மழைதான். மழை பொய்த்ததால் வளம் குன்றித் தவிக்கும் மக்களுக்கு ஆதரவாகப் பெய்வதும் மழைதான்!


கதை:

நல்லா யோசிச்சு பார்த்தேன் அன்னம். நிலத்தை வைத்துக் கொண்டு விவசாயம் செய்ய முடியாமல் இப்படிக் குற்ற உணர்ச்சியோடு அரிசி வாங்கிச் சாப்பிடுவதை விட, நிலத்தை விற்று விட்டால், அரிசி வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஆகி விடுமே!

அதான் "அந்த ரியல் எஸ்டேட்காரங்க பார்த்து நிலத்தை விற்க சம்மதம்னு சொல்லிடப் போறேன்." என்றார்.

ம்ம்ம்.. நிலத்தை விற்குறதுக்கு முன்னாடி கடைசியா ஒரு தடவை நம்ம நிலத்தை பார்த்துட்டு வருவோம்ய்யா....

சரி போவோம்.. வா..

தரிசாக இருக்கும் நிலத்தை பார்த்து அன்னம் கவலை அடைந்தாள். 

என்னாச்சு பிள்ளை?,  நீதான் நிலத்தை விற்க சொன்ன.

என்னய்யா நீ, நான் மட்டும் சந்தோஷத்தோடவா நிலத்தை விற்க சொன்னேன்...  மூன்று வருஷமா மழை இல்ல. ஆத்துல தண்ணி இல்ல. பம்ப் செட் போட்டுப் பயிர் செய்யறத்துக்கும் நமக்கு வசதி இல்ல. வெவசாயமே இல்லேங்கறப்ப 'நிலத்தை இப்படி தரிசா போட்டு வச்சு இருக்கோம்' ன்னு தான் அப்படி சொன்னேன். இது எனக்கும் சாமிதான்யா. நம்ம பிள்ளைங்க கை குழந்தையா இருக்கும் போது எத்தனை முறை இந்த மரத்துல தொட்டி கட்டி தூங்க வச்சு இருக்கோம். 

இந்த இடத்துல எத்தனையோ நாள் நான் உனக்கு சாப்பாட என் கையால உருண்ட பிடிச்சு கொடுத்து இருக்கேன். அதுலாம் நினைக்கும் போது நான் மட்டும் எப்படி கவலைப்படாம இருக்க முடியும்.

சரியா போச்சு... இம்புட்டு கவலையை மனசுல வச்சுக்கிட்டுத்தான் நிலத்தை விற்க சொன்னியா என்கிட்ட.  நீ கவலைப்படுறத பார்த்தா மூன்று வருஷம் வராத மழையும் வந்துடும் போலயே...

யோவ் கிண்டலா பண்ணுற.. உன்னைய... என்று கூறிக்கொண்டே இருக்கும் போது வானம் இடியுடன் மழை கொட்டத் துவங்கியது.

என்ன மழையோ! மூன்னு வருஷமா பெய்யாம நம்மளை வாட்டி எடுத்துச்சு. இப்ப நல்லாப் பேஞ்சு நம்ம வயித்தில பாலை வாத்திருக்கு!. இன்னும் ரெண்டு நாள் இத மாதிரி மழை பெய்தால் நமக்கு கவலையில்லை என்று சந்தோஷத்தில் கூத்தாடினர் மாரிமுத்துவும் அன்னமும்..


காணொளி வடிவில் காண கீழே உள்ள youtube லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.



No comments:

Post a Comment