Thursday, June 10, 2021

திருக்குறள் கதைகள் - குறள் 18

  திருக்குறள் கதைகள்

இயல்: பாயிரவியல்

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: 2 [வான் சிறப்பு]


குறள் 18:

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.


பொருள்:

வானிலிருந்து பெய்ய வேண்டிய மழை பெய்யாவிட்டால் வான் உலகில் வாழும் தெய்வங்களுக்கு நடக்க வேண்டிய பூசைகள் கூட நடக்காது.


கதை:

நாச்சிமுத்து கவலையாக உட்கார்ந்து இருந்தார்.

என்ன? கவலையா உட்கார்ந்து இருக்க என்று ஆத்தா கேட்க

இந்த வருஷம் ஊர் திருவிழா நடத்தறதா பஞ்சாயத்தில பேசி முடிவு எடுத்து இருக்கோம்.

நல்ல விசயம் தானடா. அதுக்கு எதுக்கு உம்முனு இருக்க? என்றாள் ஆத்தா.

ம்ம்ம்...."என்னத்தைச் சொல்றது? போன வருஷம் வசூல் ஆனதில் கால் பங்கு கூட வசூலாகலை. எப்பவும் தாரளமாகக்  கொடுக்கறவங்க கூட இந்த வருஷம் குறைவாத்தான் குடுத்தாங்க. எல்லாத்தையும் விடக் கொடுமை என்னன்னா, சில பேரு 'இவ்வளவு பணம் செலவழிச்சுத் திருவிழா நடத்தணுமா?'ன்னு கேக்கறாங்க. சில பேரு பிடிவாதமா பத்து ரூபாய் கூடக் கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க.

"இந்த வருஷம் வசூல் ஏன் இவ்வளவு குறைவுன்னு தெரியாதா?" என்றாள் ஆத்தா.

"தெரியாமல் என்ன? மழை பெய்யாததால விவசாயம் நடக்கல. ஊர்ல மத்த தொழில் செய்யறவங்களுக்கும் வருமானம் குறைஞ்சு போச்சு. யார் கிட்டேயும் காசு இல்லே. காசு இருந்தாலும் நம்ம தேவைக்கே போதாதபோது கோவில் திருவிழாவுக்குக்  கொடுக்கணுமான்னு யோசிக்கிறாங்க!"

"ஊர்ல மழை பெய்யாமல் விவசாயம் குன்றிப் போனா, திருவிழாக்கள் நடத்தறதில மக்களுக்கு எப்படி உற்சாகம் இருக்கும்?".இந்த வருஷம் திருவிழா வேண்டாம். வசூல் பண்ணின பணத்தைத் திருப்பிக் கொடுத்துடுங்க. அடுத்த வருஷம் நல்லபடியா விழாவை நடத்திடலாம்" என்றாள் ஆத்தா.

"ஆத்தா, நீங்க என்ன சொல்லுறீங்க?".

"விழா நடத்தலேன்னா சாமிக்குத்தம் ஆகி விடாதா?' என்றார் நாச்சிமுத்து.\

"மழை பெய்ய வைக்க வேண்டியது சாமிதானே? மழை பெய்யலேன்னா அது சாமியோட குத்தம் இல்லையா?. நாம வருஷா வருஷம் விழா நடத்திக்கிட்டுத்தானே இருக்கோம்? இந்த வருஷம் நாம விழா நடத்தலேன்னா அதுக்கு என்ன காரணம்னு சாமிக்குத் தெரியாதா? மழை பெய்து மக்கள் வளமாக இருந்தால்தானே சாமிக்கு விழா எல்லாம் எடுக்க முடியும்? குடும்பத்தை நடத்தறத்துக்கே கஷ்டப்படுகிற மனுஷன் சாமிக்கு விழா எடுக்கறதைப் பத்தி எப்படி யோசிக்க முடியும்?" என்றாள் ஆத்தா.

சிறிது நேரத்தில் நாச்சிமுத்து எங்கயோ கிளம்புவது தெரிந்தது.

ஏலேய் என்ன எங்கயோ கிளம்பிட்டே. சாப்பிட்டு போ என்றாள் ஆத்தா.

"இந்த விசயத்தை பஞ்சாயத்தில் பேசி தான் ஆத்தா முடிவு எடுக்க முடியும். நான் உடனே பஞ்சாயத்தை கூட்டி முடிவு எடுத்துட்டு வந்துறேன்". நீ சாப்பிட்டு படுத்துக்க ஆத்தா. என்றார் நாச்சிமுத்து.


காணொளி வடிவில் காண கீழே உள்ள youtube லிங்க்-ஐ கிளிக் செய்யவும்



No comments:

Post a Comment