Thursday, June 10, 2021

திருக்குறள் கதைகள் - குறள் 19

  திருக்குறள் கதைகள்

இயல்: பாயிரவியல்

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: 2 [வான் சிறப்பு]


குறள் 19:

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்கா தெனின்


பொருள்:

மழை பெய்யாவிட்டால் இந்தப் பரந்த உலகத்தில் தானம், தவம் என்ற இரண்டுமே இல்லாமல் போய் விடும்.


கதை:

ஊர் பஞ்சாயத்துல கூடி பேசி இந்த வருஷ ஊர் திருவிழா வேண்டாம்னு முடிவு எடுத்துட்டாங்க.

ஆமா!ஆமா, ரொம்ப நல்ல முடிவு தான். ஆனால் சுந்தரலிங்கம் தான் பாவம். ஒவ்வொரு வருடமும் ஊர்திருவிழாக்கு ஊர் முழுவதற்கும் அன்னதானம் செய்வார்.

சுந்தரலிங்கம் ரொம்ப நல்ல மனுஷன். தவ,தானம்ன்னு வாழ்க்கை வாழ்பவர் ஆச்சே. இந்த வருஷம் என்ன செய்ய போறார்?.

தெரியலையே....ஊரில் இருக்குற வசதி படைத்தவர்கள் கூட அவர் செய்யும் அன்னதானத்தில் கலந்து கொள்வார்கள். 

ம்ம்ம்.... பொறுத்து இருந்து என்ன செய்ய போகிறார்ன்னு பார்ப்போம்.

இப்படி ஒரு சோதனை வரும்ன்னு நான் எதிர்பார்க்கலை ராணி.

"நம் ஊரில் தொடர்ந்து மூன்று வருடங்களாக மழை இல்லை. விவசாயம் இல்லை. வியாபாரம் இல்லை. எல்லோரும் எப்படியோ வயிற்றையும் வாயையும் கட்டி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்."

"ராணி, இது போன்ற சமயங்களில் தானே அன்னதானம் அவசியம்?"

"சரிதான்ங்க. ஆனால் நாம் ஒன்றும் குபேரர் இல்லை. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். ஒரு சிறிய விவசாய குடும்பம். எப்போதும் செய்யும் அன்னதானமே நம் வசதிக்கு மீறியதுதான். ஆனால் இத்தனை வருஷம் நீங்க இதை ஒரளவு கஷ்டப்பட்டுச் செய்து வந்திருக்கிறார். மழை பொய்த்து வாழ்க்கையே சுமையாகிப் போன நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக நம்ம இந்த அன்னதானத்தை நடத்தியதே பெரிய விஷயம். இந்த வருடம் நிச்சயமாக நம்மால் நடத்த முடியாதுன்னு அந்த கடவுளுக்கே தெரிஞ்சுடுச்சு போல. அதான் ஊர் திருவிழா வேண்டான்னு நிறுத்தி இருக்கு. அடுத்த வருஷம் ஜமாய்ச்சுடலாம். கவலைப்படாதீங்க."

"ராணி, இது போன்ற விஷயங்கள் ஒருமுறை தடைப்பட்டால் மீண்டும் அவற்றைத் தொடர்வது கஷ்டம். ஒருமுறை தடைப்பட்ட  உறுத்தல் ஆயுள் முழுவதும் இருந்து கொண்டே இருக்கும். அதை விட ஏதோ ஒரு காரணத்தைக் கற்பித்து ஒரேயடியாக நிறுத்தி விட்டால் நிம்மதியாக இருக்கும். ஒரு காசு செலவில்லாமல் நான் செய்து கொண்டு வந்த சில அனுஷ்டானங்களையே  நிறுத்தி விட்டேனே நான்!"என்றார் சுந்தரலிங்கம்.

"என்ன சொல்லுறீங்க. நிறுத்தி விட்டீர்களா? நான் கவனிக்கவே இல்லையே?" என்றாள் ராணி வியப்புடன்.

"நான் நிறுத்தியது அதிகாலையில் செய்யும் அனுஷ்டானங்களை. நான் செய்ததையும் நீ பார்த்திருக்க மாட்டாய், நிறுத்தியதையும் பார்த்திருக்க மாட்டாய்!"

"ஏன் நிறுத்தினீர்கள்?"

"முன்பெல்லாம் அதிகாலையில் எழுந்து ஆற்றுக்குப் போய்க் குளித்து விட்டு அங்கேயே என் அனுஷ்டானங்களைச் செய்து விட்டு வருவேன். மழை பெய்யாததால் ஆற்றில் நீர் இல்லாமல் போனதும், நம் வீட்டுக் கிணற்றிலிருந்து தண்ணீர் இழுத்துக் குளித்து வீட்டு வீட்டிலேயே அனுஷ்டானங்களைச் செய்ய ஆரம்பித்தேன். பிறகு கிணற்று நீர் மிகவும் கீழே போனதும், தண்ணீர் இழுப்பதே கஷ்டமாக இருந்தது. சில சமயம் 'இன்று ஒருநாள் செய்யாவிட்டால் என்ன?' என்று தோன்றும். ஒரு நாள் ஒரு எண்ணம் தோன்றியது. 'இவ்வளவு வருடங்களாக இதையெல்லாம் தவறாமல் முறையாகச் செய்து வருகிறோமே, நமக்கும் வயதாகி விட்டது, இனிமேல் இதையெல்லாம் விட்டு விட்டால் என்ன?' என்று யோசித்தேன். இப்போது சில அனுஷ்டானங்களை விட்டு விட்டு நிம்மதியாக இருக்கிறேன்.

"உங்களால் தண்ணீர் இழுக்க முடியவில்லை என்றால் என்னை எழுப்பி இருந்தால் நான் தண்ணீர் இழுத்துக் கொடுத்திருப்பேனே!" என்றாள் பங்கஜம் ஆதங்கத்துடன்.

"நீ ஏற்கெனவே வீட்டு உபயோகத்துக்காக நாள் முழுவதும் தண்ணீர் இழுத்தும் வெளியிலிருந்து நீர் சுமந்து வந்தும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாய். நான் வேறு உனக்குக் கஷ்டம் கொடுக்க வேண்டுமா?"

"உங்கள் அனுஷ்டானங்களுக்கு உதவி செய்வது எனக்கு ஒரு கஷ்டமா?"

"அனுஷ்டானம் என்பது தன் உடலை வருத்திக் கொண்டு ஒருவர் செய்ய வேண்டிய செயல். மற்றவர்களைக் கஷ்டப்படுத்திச் செய்வதற்குப் பெயர் அனுஷ்டானம் இல்லை, அக்கிரமம். மழை பெய்யாதது எப்படிப்பட்ட பாதிப்புகளையெல்லாம் ஏற்படுத்துகிறது பார்த்தாயா? ஒரு புறம் மற்றவர் நலனுக்காகச்  செய்யப்படும் தானங்கள் நின்று போகின்றன. மறுபுறம் ஒரு மனிதன் தன்னுடைய உயர்வுக்காகச் செய்யும் தவம் போன்ற செயல்களும் நின்று போகின்றன. மழை பொய்ப்பது என்பது பெரிய கொடுமைதான்!" என்றார்.


காணொளி வடிவில் காண கீழே உள்ள youtube லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.




திருக்குறள் கதைகள் - குறள் 18

  திருக்குறள் கதைகள்

இயல்: பாயிரவியல்

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: 2 [வான் சிறப்பு]


குறள் 18:

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.


பொருள்:

வானிலிருந்து பெய்ய வேண்டிய மழை பெய்யாவிட்டால் வான் உலகில் வாழும் தெய்வங்களுக்கு நடக்க வேண்டிய பூசைகள் கூட நடக்காது.


கதை:

நாச்சிமுத்து கவலையாக உட்கார்ந்து இருந்தார்.

என்ன? கவலையா உட்கார்ந்து இருக்க என்று ஆத்தா கேட்க

இந்த வருஷம் ஊர் திருவிழா நடத்தறதா பஞ்சாயத்தில பேசி முடிவு எடுத்து இருக்கோம்.

நல்ல விசயம் தானடா. அதுக்கு எதுக்கு உம்முனு இருக்க? என்றாள் ஆத்தா.

ம்ம்ம்...."என்னத்தைச் சொல்றது? போன வருஷம் வசூல் ஆனதில் கால் பங்கு கூட வசூலாகலை. எப்பவும் தாரளமாகக்  கொடுக்கறவங்க கூட இந்த வருஷம் குறைவாத்தான் குடுத்தாங்க. எல்லாத்தையும் விடக் கொடுமை என்னன்னா, சில பேரு 'இவ்வளவு பணம் செலவழிச்சுத் திருவிழா நடத்தணுமா?'ன்னு கேக்கறாங்க. சில பேரு பிடிவாதமா பத்து ரூபாய் கூடக் கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க.

"இந்த வருஷம் வசூல் ஏன் இவ்வளவு குறைவுன்னு தெரியாதா?" என்றாள் ஆத்தா.

"தெரியாமல் என்ன? மழை பெய்யாததால விவசாயம் நடக்கல. ஊர்ல மத்த தொழில் செய்யறவங்களுக்கும் வருமானம் குறைஞ்சு போச்சு. யார் கிட்டேயும் காசு இல்லே. காசு இருந்தாலும் நம்ம தேவைக்கே போதாதபோது கோவில் திருவிழாவுக்குக்  கொடுக்கணுமான்னு யோசிக்கிறாங்க!"

"ஊர்ல மழை பெய்யாமல் விவசாயம் குன்றிப் போனா, திருவிழாக்கள் நடத்தறதில மக்களுக்கு எப்படி உற்சாகம் இருக்கும்?".இந்த வருஷம் திருவிழா வேண்டாம். வசூல் பண்ணின பணத்தைத் திருப்பிக் கொடுத்துடுங்க. அடுத்த வருஷம் நல்லபடியா விழாவை நடத்திடலாம்" என்றாள் ஆத்தா.

"ஆத்தா, நீங்க என்ன சொல்லுறீங்க?".

"விழா நடத்தலேன்னா சாமிக்குத்தம் ஆகி விடாதா?' என்றார் நாச்சிமுத்து.\

"மழை பெய்ய வைக்க வேண்டியது சாமிதானே? மழை பெய்யலேன்னா அது சாமியோட குத்தம் இல்லையா?. நாம வருஷா வருஷம் விழா நடத்திக்கிட்டுத்தானே இருக்கோம்? இந்த வருஷம் நாம விழா நடத்தலேன்னா அதுக்கு என்ன காரணம்னு சாமிக்குத் தெரியாதா? மழை பெய்து மக்கள் வளமாக இருந்தால்தானே சாமிக்கு விழா எல்லாம் எடுக்க முடியும்? குடும்பத்தை நடத்தறத்துக்கே கஷ்டப்படுகிற மனுஷன் சாமிக்கு விழா எடுக்கறதைப் பத்தி எப்படி யோசிக்க முடியும்?" என்றாள் ஆத்தா.

சிறிது நேரத்தில் நாச்சிமுத்து எங்கயோ கிளம்புவது தெரிந்தது.

ஏலேய் என்ன எங்கயோ கிளம்பிட்டே. சாப்பிட்டு போ என்றாள் ஆத்தா.

"இந்த விசயத்தை பஞ்சாயத்தில் பேசி தான் ஆத்தா முடிவு எடுக்க முடியும். நான் உடனே பஞ்சாயத்தை கூட்டி முடிவு எடுத்துட்டு வந்துறேன்". நீ சாப்பிட்டு படுத்துக்க ஆத்தா. என்றார் நாச்சிமுத்து.


காணொளி வடிவில் காண கீழே உள்ள youtube லிங்க்-ஐ கிளிக் செய்யவும்